திருப்பூர்; தாய், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்ற ‘கொடூர’ மகன் கைது
Tirupur News. Tirupur News Today- ஊத்துக்குளி அருகே தாய்-தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.
Tirupur News. Tirupur News Today- ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அந்தியூர் அத்தாணியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவரது மனைவி ரேணுகாதேவி (42). இவர்களது மகன் கார்த்தி (21). இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஊத்துக்குளி அருகே விருமாண்டம்பாளையம் ஊராட்சி ஒத்தப்பனை மேடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டில் குடியேறினர். கிருஷ்ணமூர்த்தியிடம், கார்த்தி பொக்லைன் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தோட்டத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சகுந்தலா (48) பால் கறக்க வெளியில் வந்த போது கிணற்றுக்குள் இருந்து ‘என்னை காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’ என்று அலறல் சத்தம் கேட்டது. உடனே சகுந்தலா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, அங்கு கார்த்தி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் கார்த்தி குடியிருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு கார்த்தியின் தாய் ரேணுகாதேவி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மேலும், கார்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகுந்தலா, உடனடியாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிணற்றில் கிடந்த கார்த்தியை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேணுகாதேவியின் உடலை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கார்த்தியின் தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் கார்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், "நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்து பார்த்தபோது, 2 பேர் பொக்லைன் எந்திரங்களின் பேட்டரிகளை கழட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, இருவரும் என்னைத் தாக்கி கிணற்றுக்குள் தூக்கி வீசினர். அதற்கு பிறகு நடந்த சம்பவம் எதுவும் எனக்கு தெரியாது" என்று கூறினார்.
ஆனால், அவர் கூறியதை நம்பாத போலீசார், கார்த்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், கார்த்தி தனது பெற்றோரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், அவரே கிணற்றில் குதித்து விட்டு திருடர்கள் தாக்கியதாக நாடகமாடியதும் தெரியவந்தது. கார்த்தி ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு, தனது பெற்றோரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு சம்மதிக்காததால் பெற்றோரை கார்த்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெற்ற தாய்-தந்தையை மகனே இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.