சாண எரிவாயு திட்டம் (பயோ கேஸ்) திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
Tirupur News. Tirupur News Today-மத்திய அரசின் மரபு சாரா எரிவாயு திட்டத்தை, மானியத்துடன் செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Tirupur News. Tirupur News Todayதிருப்பூர்: தமிழகத்தில் கடந்த 1987ம் ஆண்டில் சாண எரிவாயு திட்டம் (பயோ கேஸ்) திட்டம் துவங்கியது. மத்திய அரசின் மரபு சாரா எரிவாயு திட்ட துறை மானியத்துடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வந்தது. பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் கேஸ் விலையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சாண எரிவாயு திட்டத்தை தீவிரமாக்க உத்தரவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாண எரிவாயு திட்டத்தை பரவலாக்கவேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்போர் வீடுகளில் இந்த திட்டத்தை மானியத்துடன் நிறைவேற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக இந்த திட்டம் ஆரம்ப காலத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கே.வி.ஐ.சி, தீனபந்து, பிரகதி என்ற பெயரில் சாண எரிவாயு திட்டங்கள் நடந்தது. மத்திய அரசு 9 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கியது. 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதில் இரும்பு டிரம் கவிழ்த்து சாணத்தை கரைத்து ஊற்றினால் அதில் இருந்து மீத்தேன் வாயுவை நேரடியாகவும், சிலிண்டரிலும் சேகரித்து சமையலுக்கு பயன்படுத்தி வந்தார்கள். பெட்ரோலியம் பொருட்களின் மூலமாக கிடைக்கும் சமையல் கியாஸ் ஆபத்தானதாக கருதப்பட்டது. மேலும், பாத்திரங்களில் பிசுபிசுப்பு ஏற்பட்டு வந்தது. சாண எரிவாயுவில் அதுபோன்ற குறைபாடு எதுவுமில்லை.
விவசாயம் சாராத இடங்களில் கூட குறிப்பாக கேண்டீன், மாணவர் விடுதிகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் கடந்த 7 ஆண்டாக இந்த திட்டத்தை தீவிரமாக்க மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு போதுமான நிதி வழங்க வேண்டும். கிராமங்களில் குறிப்பாக விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும் இடங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், மத்திய அரசு இந்த திட்டத்தை விரிவாக்க முயற்சி செய்யவில்லை. கோவையில் 15 இடத்திலும், சேலத்தில் 13 இடத்திலும், ஈரோட்டில் 12, திருப்பூரில் 9, திருச்சியில் 10 என மாநில அளவில் 150க்கும் குறைவான இடத்தில் சாண எரிவாயு திட்டம் செயலாக்க அனுமதி கிடைத்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சாண எரிவாயு திட்டத்திற்கு மத்திய அரசு அரசு அனுமதி வழங்க வேண்டும். படிப்படியாக இந்த திட்டத்தை அதிகரித்தால் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
ஆனால், மத்திய அரசு நிதி வந்தால் தான் இதை சாத்தியமாக்க முடியும் என ஊரக வளர்ச்சி முகமையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், பயோ கேஸ் திட்டம் பாரம்பரியமானது. விவசாயம், கால்நடை வளர்ப்பு குறைந்து விட்டதால் இந்த திட்டத்தை பரவலாக்க முடியவில்லை. பல கிராமங்களில் கால்நடை வளர்ப்பு நடக்கிறது. இந்த பகுதியில் சாண எரிவாயு அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சிலிண்டருக்கு அதிக பணம் செலவு செய்வதை காட்டிலும் மத்திய அரசு இதுபோன்ற இயற்கை திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்தால் நன்றாக இருக்கும். சாண எரிவாயு திட்டத்தின் மூலமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் ரூபாய் மீதமாகும் என்றனர்.