கலைப்பாட பிரிவுக்கு, பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடம் உருவாக்க கோரிக்கை

Tirupur News. Tirupur News Today-கலைப்பாடப்பிரிவு இல்லாத பழைய பள்ளிகளுக்கும் நிரந்தர பணியிடம் உருவாக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-05-21 07:09 GMT

Tirupur News. Tirupur News Today- பள்ளிகளில், கலைப்பாட பிரிவுக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடம் உருவாக்க கோரிக்கை.

Tirupur News. Tirupur News Today - தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அறிவியல் பாடப்பிரிவு துவங்க மட்டுமே பணியிடம் உருவாக்கி ஆசிரியர்கள் நியமிப்பது வழக்கம். சேர்க்கை அதிகரிக்க அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் குழுவின் (பி.டி.ஏ.,) ஒப்புதலோடு தலைமையாசிரியர்கள் முயற்சியால், கலைப்பாடப்பிரிவு உருவாக்கப்படும். இதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து தன்னார்வலர்கள் மூலம் ஊதியம் வழங்கப்படும்.

மாதந்தோறும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த காலங்களில் சில பள்ளிகளில், தற்காலிகமாக உருவாக்கப்பட்ட கலைப்பாடப்பிரிவுகள் மூடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமீபத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு அறிவியல், கலைப்பாடப்பிரிவுகளுக்கு பிரத்யேகமாக 9 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கித் தரப்படுகிறது.

ஆனால் பல ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளில், கலைப்பாடப்பிரிவில் நிரந்தர பணியிடம் உருவாக்கித் தருவதில் இழுபறி நீடிக்கிறது. சேர்க்கை அதிகமுள்ள இப்பாடப்பிரிவுகளுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க பரிந்துரைத்தாலும், கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக பலரும் புலம்புகின்றனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது,

பி.டி.ஏ., மூலம் உருவாக்கப்பட்ட கலைப்பாடப்பிரிவுகள், அதில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் திரட்டி நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் கலைப்பாட பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பழைய பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவு உருவாக்கி தரப்படவில்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதம் உயர்த்தவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதே தீர்வாக அமையும் என்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சம்மந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பள்ளிகளில் அவர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்துள்ளது.

ஆனால் இப்பணிகளை மேற்கொள்ள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்ற சூழலில் தன்னார்வல அமைப்பினர், நலன் விரும்பிகளிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதைத்தான் அரசும் ஊக்கு விக்கிறது. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு முழுமையடையவில்லை.

சமீபத்தில் அவிநாசி மற்றும் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்க கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படுகிறது என்று எழுந்த புகாரையடுத்து இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கவனம் செலுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இன்முகத்துடன் வந்து கல்வி பயின்று செல்வதற்குரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, தங்கள் பிள்ளைகளை மாணவ, மாணவிகள் திருப்தியுடன் அனுப்பி வைக்கின்றனரா என்பதை கள ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags:    

Similar News