திருப்பூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி; ஆவேசம் காட்டிய காளைகள்
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் அருகே அலகுமலையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இதில் 577 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீர்ரகள் 59 பேர் காயமடைந்தனர்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று அலகுமலை அடிவாரத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விலங்குகள் நல வாரிய தலைவர் மிட்டல் பார்வையிட்டார். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் விழாவை வழி நடத்தினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம், பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். .
போட்டி தொடங்கியதும் அலகுமலை கோவில் மாடு வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அதைத்தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 577 காளைகள், 375 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றுக்கு தலா 25 மாடுபிடி வீரர்கள், மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, திமிறிய தோள்களை கொண்ட காளையர்கள் அடக்கினர். ஆக்ரோஷமாக வந்த காளைகளை வீரம் செறிந்த இளைஞர்கள் அடக்க பாய்ந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுபோல் காளைகளின் உரிமையாளர்களும் காயமடைந்தனர். 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர். 59 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதில் காளை உரிமையாளரான கள்ளக்குறிச்சி எரிசனநத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 31) என்பவருக்கு காளை முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 14 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக கால்நடை டாக்டர்கள், காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒவ்வொரு சுற்று முடிவில் அதிகமாக மாடுபிடித்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் களமிறங்கினர். அதிகமாக மாடுபிடித்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள், சிறந்த மாடுகளுக்கு முதல் பரிசாக மோட்டார் பைக்குகள், 2-வது பரிசாக மொபட்டுகள், 3-வது பரிசாக அரை பவுன் தங்க சங்கிலிகள் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பரிசுகளை வழங்கினார். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சசாங் சாய் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.