திருப்பூர்; தென்னையில் வெள்ளை ஈ, கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு
Tirupur News. Tirupur News Today-தென்னையில் வெள்ளை ஈ, கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, சென்னையைச் சேர்ந்த வேளாண்மை அதிகாரிகள் குழு, திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மரங்களில் ஆய்வு செய்தது.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் 65 எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம், பல்லடம், பொங்கலூர் வட்டாரங்களில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கோடைகாலம் தொடங்கி விட்டதால் தென்னையை பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ, கருந்தலைப்புழு, வாடல் நோயின் பாதிப்புகள் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வேளாண்மை இயக்குனர் அறிவுரையின் பேரில், வேளாண்மை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் (பயிர் பாதுகாப்பு) சண்முகசுந்தரம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) யுவராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை களப்பணியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி ஊத்துக்குளி வட்டாரத்தில் சுண்டக்காம்பாளையம், பல்லடம் வட்டாரத்தில் பருவாய் கிராமம், குடிமங்கலம் வட்டாரத்தில் இலுப்பநகரம், உடுமலை வட்டாரத்தில் சின்னவீரன்பட்டி கிராமம், மடத்துக்குளம் வட்டாரத்தில் துங்காவி கிராமத்தில் தென்னந்தோப்புகளில் தென்னை மரங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் கண்டறியப்பட்டன. ஒருசில தென்னந்தோப்புகளில் போரான் சத்துக்குறைபாடு தென்பட்டது. ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலித்தீன் தாள் ஆன ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க அறிவுறுத்தப்பட்டது. சிறப்பு முகாம்கள் விசைத்தெளிப்பானை கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகள் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளிடம் விளக்கமளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறினா்.
வருகிற 26,27-ம் தேதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.