சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு, உடுமலையில் பாராட்டு விழா
Tirupur News. Tirupur News Today- உடுமலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி வடமலைக்கு, வக்கீல்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
Tirupur News. Tirupur News Today - உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறந்தவர் சென்னை ஐகோர்ட் நீதிபதி பெ.வடமலை. இவர் வடமலை கணக்கம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.பின்னர் உற்பத்தி நிர்வாகத்தில் முதுகலைபட்டய படிப்பும் அதைத்தொடர்ந்து கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.
அதன் பின்பு 1990 ல் உடுமலையில் வக்கீல் யூ.கே. ஆறுமுகம் என்பவரிடம் இளம் வக்கீலாக சேர்ந்தார். பின்னர் 1995 -ம் வருடம் நடைபெற்ற நீதித்துறைக்கான தேர்வில் வெற்றி பெற்று குற்றவியல் நடுவர் நீதிபதியாக பதவி ஏற்றார்.அதன் பின்னர் 2007 சார்பு நீதிபதியாகவும், 2013 இல் சென்னை கூடுதல் முதன்மை பெருநகர் நீதிபதியாகவும், சென்னை ஐ கோர்ட்டில் மாவட்ட நீதிமன்றங்களுக்கான பதிவாளராகவும் பணிபுரிந்தார். அதன் பின்பு பல்வேறு பகுதியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக வடமலை நியமனம் செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து நீதிபதிக்கு பாராட்டு விழா நடத்துவது என உடுமலை வக்கீல் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் வக்கீல் சங்கத் தலைவர் மனோகரன் வரவேற்றார்.அதைத்தொடர்ந்து நீதிபதிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் (பொறுப்பு), தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதையடுத்து 50 ஆண்டு காலம் வக்கீல் பணியை நிறைவு செய்த மூத்த வக்கீல்கள் புருஷோத்தமன், வெங்கடாசலபதி,ஜெயராமன், ஜெயபாலன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கியும் சால்வை அணிவித்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி பெ.வடமலை பேசுகையில், பள்ளி படிப்பு முதல் சட்டம் படித்தது வரையிலான நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததுடன் உடுமலை வக்கீல் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து உடுமலை நீதிமன்றங்களில் யு.கே.ஆறுமுகம் என்பவரிடம் இளம் வக்கீலாக பணிபுரிந்ததையும், நீதித்துறைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இளம் வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு மேன்மை அடைய வேண்டும் என்றும் பேசினார்.
இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு மற்றும் உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர் நீதிபதிகள்,வக்கீல் சங்க துணை தலைவர் சிவராமன்,பொருளாளர் பிரபாகரன் ,செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் வக்கீல் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.