காங்கயம் அருகே கொடூர விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி

Tirupur Accident News Today-காங்கயம் அருகே, சரக்கு வேனும், லாரியும் மோதிய விபத்தில், மூன்று பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து, அப்பகுதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-02-26 14:31 GMT

Tirupur news, Tirupur news today- காங்கயம் நடந்த விபத்தில், 5 பேர் பலி. (மாதிரி படம்)

Tirupur Accident News Today-திருப்பூர் மாவட்டம், காங்கயம் பாப்பினி பச்சாப்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து திதி கொடுப்பதற்காக அவரது உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றுக்கு சரக்கு வேனில் சென்றனர். அங்கு திதி கொடுத்து விட்டு, பச்சாப்பாளையத்திற்கு சரக்கு வேனில் புறப்பட்டனர். வேனை நத்தகாட்டுவலசு கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த அருண்குமார் (32) ஓட்டினார்.

இன்று காலை 11 மணியளவில், காங்கயம்-முத்தூர் இடையே வாலிபனங்காடு பகுதியில் வேன் வரும்போது, அந்த வழியாக பிளைவுட்ஸ் ஏற்றி எதிரில் வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வாகனங்களும் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர்-கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், வெள்ளகோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி காங்கயம் பாப்பினி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் தமிழரசி (வயது 17), நாச்சிமுத்து என்பவரின் மனைவி சரோஜா (61), கிட்டுச்சாமி (45), பூங்கொடி (62) உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேல் சிகிச்சைக்காக 15 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து நடந்த பகுதியை காங்கயம் டி.எஸ்.பி. பார்த்திபன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழக அரசு நிவாரணம்

இந்நிலையில், திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News