திருப்பூரில் 297 பவுன் போலி நகை மோசடி; ரூ.81 லட்சம் ‘லபக்’ செய்த மேலாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 297 பவுன் போலி நகையை கணக்குகாட்டி ரூ.81 லட்சம் மோசடி செய்த மேலாளர் உள்ளிட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-19 02:08 GMT

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், போலி நகையை கணக்குகாட்டி ரூ.81 லட்சம் மோசடி செய்த 3 பேரை, போலீசார் கைது செய்தனர். (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் அவிநாசி ரோட்டில் பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ் என்ற பெயரில் வங்கி சாரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் மண்டல வர்த்தக பிரிவு பொறுப்பாளர் சரண் சிவக்குமார் திருப்பூர் மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'எங்கள் திருப்பூர் நிதி நிறுவன கிளையில் கடந்த ஆண்டு வரவு-செலவு தணிக்கை நடந்தது. அப்போது நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் நகையை மீட்காமல் இருந்ததுடன், வரவு-செலவு கணக்கில் குளறுபடி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வாடிக்கையாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள், தாங்கள் அடமானம் வைத்த நகைக்கு உரிய பணத்தை செலுத்தி நகையை திரும்ப பெற்றுச் சென்றதாக தெரிவித்தனர்.  இதனால் வங்கி பெட்டகத்தில் உள்ள நகையை எடுத்து சோதனை செய்தபோது, அந்த நகைகள் அனைத்தும் தங்க நகைகள் அல்ல. போலியானது என்பது தெரியவந்தது. 2 ஆயிரத்து 376 கிராம் (297 பவுன்) நகையை இவ்வாறு போலியாக தயாரித்து ரூ.81 லட்சம் மோசடி நடந்ததுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் மேற்கண்ட நிதி நிறுவன மேலாளராக பணியாற்றி வந்த உடுமலையை சேர்ந்த சிவா (வயது 29), நகை மதிப்பீட்டாளராக பணிசெய்த திருப்பூர் செட்டிப்பாளையம் பொங்குபாளையத்தை சேர்ந்த பிரபு (32), ஊழியரான குன்னத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் (32) ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

வாடிக்கையாளர்கள் பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தி நகையை திருப்பி சென்ற பின்னர், அந்த கணக்கை முடிக்காமல், அதில் குறிப்பிட்ட நகை போல் போலியாக நகையை செய்து வங்கி பெட்டகத்தில் வைத்து ரூ.81 லட்சம் வரை மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவா, பிரபு, விஸ்வநாதன் ஆகிய 3 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை, அதற்குரிய தொகையை செலுத்தி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில், அந்த நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகைகளை பெட்டகத்தில் வைத்து,  81 லட்சம் ரூபாய் வரை, வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் ‘ஆட்டைய’ போட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி எல்லாம், புதுசு புதுசா யோசிச்சு, இப்படி எல்லாம் மோசடி பண்றாங்களோ, என மக்கள் புலம்பும் அளவுக்கு இந்த சம்பவம், திருப்பூரில் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News