4ம் மண்டல பாசன நிலங்களுக்கு, கூடுதல் நீர் வழங்க திருப்பூர் விவசாயிகள் வலியுறுத்தல்
Tirupur News- 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு, நவம்பரில் கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு கோடை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக பயன் அளிக்கும் தென் மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இல்லை.இதனால் பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு முழுமையான சுற்றுக்கள் நீர் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.
பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 11ந் தேதி வரை, 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு மொத்தம், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதான கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாணதோடு கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட 6 நாட்கள் மீண்டும் நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேலும், 6 நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.
திருப்பூர் பிரிவு கால்வாய்க்கு மட்டும் நேற்று முன்தினம் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. 135 நாட்கள் மண்டல பாசன காலமாகக்கொண்டு 5 சுற்றுக்கள் வரை நீர் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு பருவ மழை ஏமாற்றியதால் பாசன காலம் உயிர்த்தண்ணீர் சுற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.வட கிழக்கு பருவ மழையும் தற்போது துவங்கியுள்ளதால், 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை பொருத்து, நவம்பர் மாதத்தில் கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.