திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் வேலை நிறுத்தம் இன்றுடன் நிறைவு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 5ம் தேதி முதல் ஜவுளி உற்பத்தியாளர் துவங்கிய உற்பத்தி நிறுத்தப் போராட்டம் இன்றுடன் நிறைவடைந்தது.;
Tirupur News,Tirupur News Today- தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், காடா துணி விற்பனை சரிவடைந்துள்ளது. அண்டை நாடுகளுடன் போட்டி போட இயலாத நிலையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு துணி உற்பத்தி முடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 5-ம் தேதி முதல் இன்று 25- ம்தேதி வரை முழு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய உள்ள சூழலில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது,
இக்கட்டான சூழல் காரணமாக, உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் என எதிர்பார்த்தோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 20 நாட்களாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இதனால் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக பணிக்கு திரும்பவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் மீண்டும் கலந்து ஆலோசித்து, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.