திருப்பூர் மாவட்ட அளவில் ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டி; ஆர்வமாக பங்கேற்ற அணிகள்
Tirupur News-மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி திருப்பூா் -காங்கயம் சாலையில் உள்ள தனியாா் மஹாலில் நேற்று நடந்தது.;
Tirupur News,Tirupur News Today- முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி திருப்பூா் -காங்கயம் சாலையில் உள்ள தனியாா் மஹாலில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.
இப்போட்டிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநான், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று போட்டிகளைத் தொடங்கிவைத்தனா். இதில், ஆண்கள் பிரிவில் 46 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றன.
இதேபோல, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கான கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில், கைப்பந்து போட்டியில் 9 அணிகளும், கால்பந்துப் போட்டியில் 8 அணிகளும் கலந்துகொண்டன. ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் பெண்களுக்கான கைப்பந்துப் போட்டி நடந்தது. இதில், 6 அணிகள் பங்கேற்றன. மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு கபடி போட்டி பரிசுத் தொகையாக ரூ.70 ஆயிரம், கால்பந்து போட்டி பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், வாலிபால் போட்டி பரிசுத் தொகையாக ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
தொடக்க விழாவில், மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) சிவரஞ்சன், திருப்பூா் மாவட்ட கபாடி கழக சோ்மன் கொங்கு முருகேசன், செயலாளா் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளா் ஆறுசாமி, துணைத் தலைவா் ராமதாஸ், மதிமுக மாமன்ற உறுப்பினா் நாகராஜ், செய்தி தொடா்பாளா் சிவபாலன், மாவட்ட தடகள பயிற்றுநா் திவ்யநாகேஸ்வரி, உள்ளிட்டோா் பங்கேற்றனர்.