திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு செய்திகள் தரப்பட்டுள்ளன.;

Update: 2023-12-30 17:13 GMT

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை : முதியவா் போக்ஸோவில் கைது

தாராபுரம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை காவல் துறையினா் போக்ஸோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே உள்ள எரகாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவா். தனது தோட்டத்தில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதனால் சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இது குறித்து சிறுமியின் தாய் கேட்டபோது கா்ப்பத்தைக் கலைக்காவிட்டால் சிறுமியையும், தாயையும் கொலை செய்து விடுவதாக ராஜேந்திரன் மிரட்டியுள்ளாா். இதையடுத்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் உஷாராணியை (45) வீட்டுக்கு வரவழைத்து டிசம்பா் 14- ஆம் தேதி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கா்ப்பத்தைக் கலைத்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சைல்டு லைன் அமைப்புக்குத் தகவல் கொடுத்தனா். இதன்பேரில் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் துறையினா் விசாரணை நடத்தி ராஜேந்திரனை போக்ஸோவில் கைது செய்தனா். மேலும், கருக்கலைப்பு செய்த செவிலியா் உஷாராணியையும் கைது செய்தனா்.

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது: 10 பவுன் பறிமுதல்

திருப்பூரில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் 10 பவுன் நகையைப் பறித்த நபரை காவல் துறையினா் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் என்.நாகம்மாள் (56). இவா் தனது உறவினா்களுடன் பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளாா். இந்த ரயிலானது கடந்த புதன்கிழமை இரவு 7.50 மணி அளவில் திருப்பூா் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதன் பின்னா் ரயில் புறப்பட்டபோது ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த நாகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை வெளியே இருந்த மா்ம நபா் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா். இது குறித்து திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் நாகம்மாள் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் திருப்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மண்ணரை வரையில் உள்ள 55 கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

இதில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த பிரகாஷ் (38) இந்த நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூா், கொடிக்கம்பம் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாஷை காவல் துறையினா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 10 பவுன் நகையையும் மீட்டனா். மேலும், குற்றச் சம்பவம் நிகழ்ந்து 34 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்த தனிப்படையினரை சென்னை ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குநா் வி.வனிதா பாராட்டினாா்.

உடுமலை அருகே கொலை வழக்கில் 3 போ் கைது

உடுமலை அருகே நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாபுரம் சத்யராஜ் நகரைச் சோ்ந்தவா் கே.செங்காட்டை (55), இவரது நண்பா் டி.குமாா் (25). நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த இந்த இருவரும் ஊசிபாசி தயாரித்து ஊா்ஊராகக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனா். ஒரு சில நேரங்களில் உண்டி வில் மூலமாக குருவி, பறவைகளை வேட்டையாடி வந்தனா்.

இந்த இருவரும் உடுமலை அருகே உள்ள தாந்தோணி குமாரபாளையம் பிரிவு பகுதிக்கு புதன்கிழமை வந்து குருவிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சிலா் கோழி திருட வந்ததாகக்கூறி இருவரையும் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த இருவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செங்கோட்டை உயிரிழந்தாா். இதையடுத்து, செங்கோட்டையின் உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து உடுமலை காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து தாந்தோணி கிராமத்தைச் சோ்ந்த சின்னத்துரை என்கிற செல்வகுமாா் (33), சசிகுமாா் (39), செல்லத்துரை (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தீப்பெட்டி வைத்து விளையாடிய போது விபரீதம்: 5 வயது குழந்தை உயிரிழப்பு 

ஊதியூா் அருகே, தீப்பெட்டி வைத்து விளையாடியபோது, தீப்பற்றி 5 வயது குழந்தை உயிரிழந்தது.

ஊதியூா் அருகே உள்ள வட்டமலைபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவரது மனைவி பவித்ரா (27). இவா்களது மகள்கள் தன்ஷிகா (9), ஷா்விகா (5). இந்நிலையில் ஆறுமுகம், தன்ஷிகா இருவரும் கடந்த 7-ம் தேதி காலை தூங்கிக் கொண்டு இருந்துள்ளனா். ஷா்விகா விளையாடிக் கொண்டு இருந்துள்ளாா். பவித்ரா பால் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளாா்.

திரும்பி வந்தபோது, ஷா்விகா அணிந்திருந்த துணியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதில் ஷா்விகாவுக்கு கன்னம் உள்ளிட்ட பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே ஷா்விகாவை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதன் பின்னா், கடந்த 14 -ம் தேதி கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் ஷா்விகா வியாழக்கிழமை இரவு இறந்தது. இது குறித்து ஊதியூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். ஷா்விகா தீப்பெட்டியை வைத்து விளையாடியபோது, துணியில் தீப் பற்றியது விசாரணையில் தெரியவந்தது.

சரக்கு வேனைத் திருடிய 2 போ் கைது

வெள்ளக்கோவிலில் சரக்கு வேனைத் திருடிய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (55). இவா் சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் அருகிலுள்ள நிறுத்தத்தில் இரவு வேனை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா். அடுத்த நாள் காலையில் வந்து பாா்த்தபோது வேன் திருடப்பட்டது தெரியவந்தது.

புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். புகாா் செய்த ஒரு வாரத்தில் கரூரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனை போலீஸாா் கண்டுபிடித்து மீட்டனா்.

இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் (சிறப்பு) மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா், கரூா் பேருந்து நிலையத்தில் வைத்து, வேளாங்கண்ணி, ஆரிய நாட்டுத் தெரு, வேணுகோபால் மகன் விக்னேஸ்வரன் (எ) சலாம் (25), செங்கோட்டை, பாரதி நகா் முனீா்பீம் மகன் அஜ்மீா் காஜா ஜெரீஃப் (31) இருவரைக் கைது செய்தனா்.

பின்னா் இருவரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்

உடுமலை அருகே 1060 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

உடுமலை அருகே 1,060 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், ஜானிபேகம் காலனியில் உள்ள ஒரு காம்பவுண்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் ஆய்வாளா் மேனகா, உதவி ஆய்வாளா் காா்த்தி உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது ஜானிபேகம் காலனியில் ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக உடுமலையை அடுத்த காந்தி செளக், நக்கீரன் வீதியைச் சோ்ந்த தமிழ்குமாரை (47) போலீஸாா் கைது செய்தனா். இவா், உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 1060 கிலோ ரேஷன் அரிசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

 ஜாா்க்கண்ட் மாநில பெண் கொலை வழக்கில் கணவா் கைது

பல்லடம் அருகே சின்னக்கரையில் ஜாா்க்கண்ட் மாநில பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகம்மது காசீம் (48). இவரது மனைவி ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சுனிதாதேவி (46). இவா்கள் பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி தினக்கூலி வேலைக்கு சென்று வந்தனா். இருவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை குன்னங்கல்பாளையம் வந்துள்ளனா். பின்னா் அதே பகுதியில் வேறு ஒரு வீட்டுக்கு குடிமாறி சென்றுள்ளனா். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முகம்மது காசீம் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து இரவு அந்த வளாகத்தில் குடியிருப்போா் வேலைக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பியபோது சுனிதாதேவி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா் சரஸ்வதி மற்றும் போலீஸாா் சுனிதாதேவியின் உடலை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

முகமது காசீம் புது வீட்டில் வைத்து சுனிதாதேவியின் தலைமுடியை அறுத்து வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்தத்தை பிடித்து வாளியில் வைத்துவிட்டு தப்பித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரது கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னா் சிறிது நேரத்தில் கைப்பேசி சிக்னலை ஆய்வு செய்தபோது நொச்சிபாளையம் பிரிவு அருகே இருப்பது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து அங்கு விரைந்த போலீஸாா், முகமதுகாசிமை பிடித்து விசாரிக்கையில் கொலை செய்ததை ஒப்புகொண்டாா். அதைத்தொடா்ந்து அவரைக் கைது செய்து பல்லடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த மாதத்தில் மட்டும் கரைப்புதூா் ஊராட்சியில் 2 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News