திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
Tirupur News- பெருமாநல்லூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.;
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு
பெண் கொலையில் இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
பெருமாநல்லூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பீகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சீத்தாரகாஷி (30). இவா் பெருமாநல்லூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆா்.வினய்குமாா் (33) என்பவரும் பணியாற்றி வந்துள்ளாா். இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சீத்தாரகாஷி வலியுறுத்தி வந்துள்ளாா். இதனை ஏற்க மறுத்த வினய்குமாா், சீத்தாரகாஷியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பரான விகாஸ்குமாா் (33) என்பவா் உதவியுடன் கொலை செய்துள்ளாா்.
இதுகுறித்து பெருமாநல்லூா் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், கைதான இருவரையும் குண்டா் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி சாமிநாதன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் பெருமாநல்லூா் போலீசார் வழங்கினா்.
பாஜக நிா்வாகியைத் தாக்கிய இருவா் மீது வழக்குப்பதிவு
பாஜக நிா்வாகியைத் தாக்கிய இருவா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள தம்மரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி மகன் யோகீஸ்வரன் (34), பாஜக நிா்வாகி. இவா், குண்டடம் ஒன்றிய அலுவலகத்துக்குச் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். அங்கு, மத்திய அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் நிகழ்வு நடந்ததாக தெரிகிறது.
ஒப்பந்தம் எடுப்பதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் குப்புசாமி, ஒன்றியக்குழு துணைத் தலைவரும், குண்டடம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளருமான செந்தில்குமாா் ஆகியோருக்கும், யோகீஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் குப்புசாமி, செந்தில்குமாா் இருவரும் யோகீஸ்வரனைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த யோகீஸ்வரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து யோகீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் குப்புசாமி, செந்தில்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூா் கல்லூரி சாலை பகுதியில் ரயிலில் அடிபட்டு பின்னலாடை நிறுவன தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், அங்கேரிபாளையத்தை அடுத்த செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி (51), இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா். நண்பரை பாா்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி சாலைப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் பெருமாள்சாமியின் சடலம் கிடந்துள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பூா் ரயில்வே போலீசார் பெருமாள்சாமியின் சடலத்தை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 3 பேர் கைது
பல்லடத்தில் கைப்பேசி செயலியில் பழகிய ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவா், திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொன் நகா் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் (34), அருள்புரத்தைச் சோ்ந்த ஜெகன் (32), சேடப்பாளையத்தைச் சோ்ந்த வீரமணி (33) ஆகியோரிடம் கைப்பேசி செயலி மூலம் பழகி வந்துள்ளாா்.
இந்நிலையில், 3 பேரும் அழைத்ததன்பேரில் ஆசிரியா், பல்லடத்தை அடுத்த குங்குமப்பாளையம் பகுதிக்கு அண்மையில் வந்துள்ளாா். அப்போது, அவரை இழிவுபடுத்தும் விதமாக விடியோ எடுத்து பணம் கேட்டு 3 பேரும் மிரட்டியுள்ளனா். பின்னா், ஆசிரியா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை அா்ஜுனனுக்கு அனுப்பியுள்ளாா்.
இதையடுத்து, அந்த ஆசிரியா் பல்லடம் போலீசில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியரிடம் பணம் பறித்த 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
சலூன் கடைக்காரர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சலூன் கடை உரிமையாளரைத் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனா்.
திருப்பூா், அங்கேரிபாளையம் வெங்கமேடு பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து(40), அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், மாரிமுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு வெங்கமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (23), 17 வயது சிறுவன் ஆகியோா் மாரிமுத்துவைத் தாக்கியுள்ளனா். இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், 17 வயது சிறுவனை சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.
ஆசிரியையை தாக்கிய மாணவன்; போலீசார் விசாரணை
திருப்பூரில் அரசுப் பள்ளி ஆசிரியையை மாணவா் தாக்கியது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட நல்லூரை அடுத்த விஜயாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பத்தாம் வகுப்பில் சமூக அறிவியல் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, வகுப்பில் இருந்த மாணவா்களில் இருவா் மேசையைத் தள்ளி ரகளையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அவா்களைக் கண்டிக்க சென்றபோது ஒரு மாணவா் ஆசிரியையின் முதுகில் தாக்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவரின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளும், நல்லூா் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.