திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
Tirupur News Tamil -பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வாலிபர்கள், வாகன சோதனையின் போது, போலீசாரிடம் வசமாக சிக்கினர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Tirupur News Tamil -பல்லடம், வடுகபாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(62) இவரது மனைவி ஜானகி(56) கணவன் - மனைவி இருவரும், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, ஸ்கூட்டரில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து ஜானகி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்த தம்பதி, இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர். இந்நிலையில், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில், பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர் அவர்களை துரத்தி பிடித்த போலீசார், விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சாமி கவுண்டம்பாளையத்தில் ஜானகியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அப்பாஸ் (23) திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் (திலீப் ராஜ் 30,)ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விபத்தில் வாலிபர் பலி
ஈரோடு மாவட்டம், புன்செய்புளிய ம்பட்டி சுல்தான் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சுரேஷ்கிருஷ்ணா (24). இவா், அன்னூா் அருகே பொங்கலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், புன்செய்புளியம்பட்டியிலிருந்து அன்னூா் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தாா். சேவூா், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வரும்போது, அன்னூரிலிருந்து, அந்தியூா் நோக்கி சென்ற லாரியும், இவரது டூவீலரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா உயிரிழந்தாா். இதையடுத்து சேவூா் போலீஸாா் லாரியை ஓட்டி வந்த அந்தியூா், சின்னத்தம்பிபாளையம் புதுமேட்டூரைச் சோ்ந்த அருள் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; இருவர் கைது
திருப்பூர் அவிநாசி ரோடு, கீரணி சந்திப்பு அருகே உள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் மசாஜ்சென்டர்செயல்பட்டு வருவதாகவும் இங்கு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாகவும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருப்பூர் வடக்கு போலீசார், அந்த மசாஜ் சென்டரில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு 5 பெண்கள், 2 ஆண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இளம்பெண்களை வரவைத்து, அவர்கள் மூலம் மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்திய செந்தமிழ்ச்செல்வன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் செயின் பறித்த நபருக்கு 3 ஆண்டு சிறை
அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் சி.எஸ்.ஐ காலனி பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 38). இவர் கடந்த 28.7.16 அன்று ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர், வசந்தியின் வாகனத்தை வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக தேவகோட்டை ராம்நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்கிற அய்யப்பன் (47) என்பவரை கைது செய்து, அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை முடிவில், குற்றவாளி அய்யப்பனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து நீதிபதி சபீனா தீர்ப்பு கூறினார்.
கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
உடுமலையை அடுத்த சின்னவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவர் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில், மருந்துக்கடை நடத்தி வருகிறார். சுபாஷ் சந்திரபோஸ் வழக்கம் போல் காலையில், மருந்துக்கடைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி வீட்டை பூட்டி விட்டு, மதுரையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில், மதியம் சுபாஷ் சந்திர போசின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக, அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக வீட்டுக்கு அவர் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவிலிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்
திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 1700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். பெருமாநல்லூர் சாலை மற்றும் குமரானந்தபுரம் சாலை, நெசவாளர் காலனி சாலை என நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால், இங்கு எப்போதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்லும்போது மிகுந்த நெருக்கடிக்கு இடையே விபத்து நேரிடும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே பள்ளி நேரத்தில் காலை, மாலை என இருவேளையும் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தினர். அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உரிய தடுப்புகள் இல்லை, போக்குவரத்து போலீசாரும் இருப்பதில்லை. இதனால் தினமும் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவரும் வரை பதற்றத்துடனே இருக்க நேரிடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் அந்த பள்ளியின் முன் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் எவ்வித ஒழுங்குமின்றி தாறுமாறாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பி.என்.ரோடு நெசவாளர் காலனி சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பள்ளி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த தகவலறிந்து அங்குவந்த திருப்பூர் வடக்கு போலீசாரிடம், 'பள்ளி நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து போலீசார்களை நியமிக்க வேண்டும் அல்லது உரிய தடுப்பு அரண்களை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்' என்று பெற்றோர் தரப்பில், வலியுறுத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, 20 நிமிடங்கள் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2