திருமணத்துக்கு பெண் இருப்பதாகக்கூறி கேரளா வாலிபரிடம் பணம், நகை பறிப்பு: 5 பேர் கைது
திருப்பூர் அருகே, திருமணத்திற்கு பெண் இருப்பதாக அழைத்து கேரளா வாலிபரிடம் பணம், நகை பறித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.;
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,32. இவர், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தார். அத்துடன், கேரளா நாளிதழில், மணப்பெண் தேவை என மார்ச் மாதம் விளம்பரம் செய்திருந்தார்.
இதற்கிடையில்,ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்ட ஒருவர், தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் என்றும், மணப்பெண் இருப்பதாகவும் போனில் தெரிவித்தார். இதை நம்பிய ராமகிருஷ்ணன், தனது நண்பர் பிரவீனுடன் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி காரில் பல்லடம் வந்தார்.
தன்னை தொடர்பு கொண்ட நபரிடம், பெண் குறித்து விசாரித்தார். அப்போது அங்கு வந்த நபர், ராமகிருஷ்ணனை ஒரு வீட்டில் உட்கார வைத்து பெண் அழைத்து வருவதாக கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பலுடன் வந்து, அவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த 7 பவுன் செயின், 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிவிட்டனர்.
அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், ஆலத்தூர் போலீஸில் புகார் செய்தார். கேரளா போலீசார், திருப்பூர் போலீசரின் உதவியுடன் விசாரித்தனர். அவர்கள், திருப்பூர் மத்திய காவல் எல்லையில் இருப்பது தெரிய வந்தது. அங்கு வந்த கேரளா போலீசார், பாலக்காடு கஞ்சிக்கோட்டை சேர்ந்த விமல்,43, திருப்பூரை சேர்ந்த பிரகாஷ்,40, சிவா,39, விக்னேஷ்,23, மணிகண்டன்,25, ஆகிய 5 பேரை கைது செய்தனர்.