திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார்மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், திருப்பூர் புஷ்பா தியேட்டரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில், கொங்கணகிரி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. அருகில் உள்ள மங்கலம் ரோட்டில், தனியார் கல்லூரி, பள்ளிகள் செயல்படுகின்றன.
கொங்கணகிரி பஸ் ஸ்டாப் வழியாக தான் மாணவியர், பள்ளி குழந்தைகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்கின்றனர். கொங்கணகிரி பஸ் ஸ்டாப்பில் செயல்படும் டாஸ்மாக் கடையில், மது அருந்தும் குடிமகன்கள், குடித்து அங்கே படுத்துவிடுகின்றனர். குடித்து ஆபாசமாக பேசுவதும் தொடர்கிறது. இதனால் மாணவியர், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.