மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா
மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அங்காளம்மன் நகரில் 80 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. மின் இணைப்பு வழங்க கோரி பலமுறை மனு அளித்த பிறகு, மின் கம்பங்கள் நடப்பட்டது. ஆனால், தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டது. அங்காளம்மன் நகரில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்க்கும் முகாமில் மனு அளிக்க வந்தனர். அப்போது, மின் இணைப்பு வழங்க கோரி திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.