நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர் தகவல்
உழவர்கள் தங்கள் செல்போனில் உழவன் செயலி மூலமாக கூடுதல் விவரங்களை பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் நெல் -2 ( சம்பா ) பயிருக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் பயிருக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், வெள்ளகோவில் வட்டாரங்களில் நெல்-2 சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு வருகிற 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத்தொகை பெற்று பயன் பெற முடியும். விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 532 செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். உழவர்கள் தங்கள் செல்போனில் உழவன் செயலி மூலமாகவும் கூடுதல் விவரங்களை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.