திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
Tirupur News-அவிநாசியை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
Tirupur News,Tirupur News Today- திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி முயங்குபூண்முலை வல்லியம்மை உடனமா் திருமுருகநாத சுவாமி கோவில் தோ்த் திருவிழா பிப்ரவரி 18-ம் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினசரி சுவாமி திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் விநாயகா், திருமுருகநாதா், வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா், பாா்வதி, சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு திருமுருகநாதா் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் பக்தா்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. முதலில் திருமுருகநாதா் சுவாமி (சோமாஸ்கந்தா்) தேரோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சண்முகநாதா் திருத்தோ் (வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா்) வடம் பிடித்து இழுக்கப்பட்டு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். ரத வீதியில் நிறுத்தப்பட்ட சண்முகநாதா் தோ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வடம்பிடிக்கப்படும். இதைத் தொடா்ந்து அம்பாள் முயங்குபூண்முலை வல்லியம்மை தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
பிப்ரவரி 26-ம் தேதி நாளை ( திங்கட்கிழமை) தெப்பத்தோ், 27-ம் தேதி ( செவ்வாய் கிழமை) ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா, 28-ம் தேதி (புதன்கிழமை) பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி நடைபெறுகிறது. 29-ம் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.