தீபாவளி நெருங்குவதால் அதிகரிக்கும் திருட்டுகள்; உஷார் நிலையில் திருப்பூர் போலீசார்
Tirupur News- தீபாவளி நெருங்குகிற நிலையில், திருப்பூரில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.;
Tirupur News,Tirupur News Todayதிருப்பூர்:-திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு துணி, பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி செல்வர். பண்டிகை காலங்களில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் சில நாட்களாக திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் , காதர் பேட்டை உட்பட மாநகரின் பிரதான ரோடு, முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் தற்காலிக துணிக்கடைகள், பலகார கடைகள், பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தவும் உள்ளனர்.தற்போது இருந்தே மக்கள் கூடும் இடங்கள், பஸ்களில் வழிப்பறி திருடர்கள், பிக்பாக்கெட் நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மப்டியில் ரோந்து சென்று வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மிக விரைவில் பனியன் தொழில் நிறுவனங்களிலும், இதர தொழில் நிறுவனங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்க உள்ளது. போனஸ் வாங்கிய பின், புதிய துணிகள் எடுக்கவும், ஆடைகள் வாங்கவும், நகைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள் வாங்கவும் திருப்பூர் மாநகர பகுதிக்குள் கூட்டம் அலைமோதும்.
அதே போல் அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் என நகர பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். வாகனங்களின் போக்குவரத்தும், பிரதான ரோடுகளில் மக்கள் நெரிசலும் அதிகரிக்கும். இதனால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடந்து செல்லும் மக்களிடம், பஸ்களில் பயணிப்பவர்களிடம் பிக்பாக்கெட் திருடர்கள் பணத்தை அபகரிக்க அதிக வாய்ப்புள்ளது. செயின் பறிப்பு திருடர்களும் கைவரிசை காட்டுவர் என்பதால், போலீசார் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்போதே, போலீசார் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.