கோவில் பூசாரி கொலை; வேன் டிரைவர் கைது

Kovil Poosari-வெள்ளகோவில் அருகே, கள்ளத்தொடர்பை மற்றவர்களிடம் கூறியதால், ஆத்திரம் அடைந்த வேன் டிரைவர், கோவில் பூசாரியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

Update: 2022-10-06 02:42 GMT

Kovil Poosari

Kovil Poosari-திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வேளகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் பூசாரி. மேலும் ஆடு, மாடுகள் மேய்த்தும், கூலி வேலையும் செய்தார். இவருடைய மனைவி மல்லிகா (45). இவர் வெள்ளகோவில் நகராட்சியில் பகுதி நேர துப்புரவு பணியாளராக பணி செய்கிறார். இவர்களுக்கு மோகன்ராஜ் மற்றும் சுகன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மல்லிகா கடந்த 3-ம்தேதி வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது மாரிமுத்து வீட்டில் இல்லை. அவர் எங்கேயாவது கோவிலில் பூஜைக்கு சென்று இருக்கலாம், பூஜை முடிந்ததும் வந்து விடுவார் என மல்லிகா இரவு வரை காத்திருந்தார். ஆனாலும் மாரிமுத்து வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்ற போது 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு எங்கு தேடியும் மாரிமுத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர், வெளியிடங்களுக்கு சென்றால், வீட்டில் தகவல் சொல்லிவிட்டுதான் செல்வார். ஆனால், எவ்வித தகவலும் சொல்லாமல், திடீரென அவர் காணாமல் போனது, மல்லிகாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும், அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.

இதுகுறித்து மல்லிகா வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் பிரேம்குமார் (32) என்பவருடன் தனது தந்தை பேசிச்கொண்டிருந்ததை பார்த்ததாக இளைய மகன் சுகன் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார், பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டதால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதையடுத்து, கோவில் பூசாரியை கொலை செய்தததை அவர் ஒப்புக்கொண்டார். மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தனது வேனில் வெள்ளகோவில் அக்கரைபாளையம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரையோரம் வீசி விட்டதாக பிரேம்குமார் கூறினார். இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.  காங்கயம் போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பிரேம்குமாரை அமராவதி ஆற்றங்கரைக்கு கூட்டிச்சென்று, மாரிமுத்துவின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வேன் டிரைவர் பிரேம்குமாருக்கு, திருமணம் இன்னும் ஆகவில்லை. இதற்கிடையில் வேளகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரேம்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த தொடர்பு பற்றி மாரிமுத்து, மற்றவர்களிடம் சொன்னதால் முன்விரோதத்தில் அவரை பிரேம்குமார் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கைதான பிரேம்குமாரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News