திருப்பூர் மாவட்ட கோர்ட்களில் சிறப்பு லோக் அதாலத்; 439 வழக்குகளில் ரூ.16.75 கோடிக்கு சமரசம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட கோர்ட்களில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 439 வழக்குகள் ரூ.16.75 கோடிக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது. இதில் விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.52.50 லட்சம் இழப்பீடு பெற உத்தரவு வழங்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today-திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்களில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் மொத்தம் 7 அமர்வுகளாக நடந்தது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில் பல்லடம் பி.வடுகபாளையம் பகுதியை சேர்ந்த சக்திபிரவீன் (வயது 26) என்பவர் பல்லடத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக பணி செய்தார். கடந்த 29-5-2022 அன்று கோவை-திருச்சி ரோட்டில் சோளியப்பகவுண்டன் புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சக்தி பிரவீன் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் அவருடைய வலது கால் துண்டானது. இதற்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
தனக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனு செய்து இருந்தார். இந்த வழக்கு நேற்று நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவருக்கு ரூ.52.25 லட்சம் வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டதால் சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான உத்தரவை மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் ஆகியோர் சக்தி பிரவீனிடம் வழங்கினா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில், வக்கீல் பாலாஜிகிருஷ்ணன் உடனிருந்தார்.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,226 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 439 வழக்குகளுக்கு ரூ.16 கோடி 81 லட்சத்து 45 ஆயிரத்து 511 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் 53 சிவில் வழக்குகள், 8 குடும்ப நல வழக்குகள், 156 சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், 11 காசோலை மோசடி வழக்குகள், 54 வங்கி வராக்கடன் வழக்குகள் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், விரைவுநீதிமன்ற நீதித்துறை நடுவர் ரஞ்சித்குமார், வக்கீல்கள் ரகுபதி, பத்மநாபன், பாலகுமார், மோகன், பாலாஜி கிருஷ்ணா, மல்லிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம்
காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது.
காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இந்த மக்கள் நீதிமன்றம் ஒரு அமர்வாக நடைபெற்றது. காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் இந்த அமர்வில் பங்கேற்றனர்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 65 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் ரூ.98 லட்சத்து 72 ஆயிரத்து 280 மதிப்புக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் மக்கள் நீதிமன்றம் மூலம் 138 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 235 பேர் பயனடைந்தனர்.
தாராபுரத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படி திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் குழுவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப்பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தர்மபிரபு தலைமை வகித்தார்.
குற்றவியல் நடுவர் பாபு முன்னிலை வகித்தார். அப்போது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 17, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 43, ஜீவனாம்ச வழக்கு 2, குடும்ப வன்முறை வழக்கு, செக் மோசடி 2 வழக்குகள் உள்பட 138 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. அதில் 138 வழக்குகளும் மொத்தம் ரூ.4 கோடி 25 லட்சத்து 83 ஆயிரத்து 160 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகள் மூலம் 235 பயனாளிகள் பயனடைந்தனர். அப்போது வழக்கறிஞர் சேகர், வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியை வட்ட சட்டப்பணிக்குழு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
உடுமலை
உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலூகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்-1 செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. சார்பு நீதிமன்றத்தில் ஒரே அமர்வாக நடந்த இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிறு குற்றத்திற்குரிய வழக்கு 55-ல் 47 வழக்குகள் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 200-க்கும், வங்கி வராக்கடன் வழக்கு 3 வழக்கு ரூ.8 லட்சத்து 54 ஆயிரத்து 280-க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்கு 10-ல் 8 வழக்குகள் ரூ.29 லட்சத்து 80 ஆயிரத்து 600, இதர சிவில் வழக்கு 3-ல் 2 வழக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 750-க்கும், காசோலை மோசடி வழக்கு 3-ல் 2 வழக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், மணமுறிவு வழக்குகள் 3-ல் 2 வழக்கு சேர்ந்து வாழ ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆக மொத்தம் 77 வழக்குகள் எடுக்கப்பட்டு 64 வழக்குகளுக்கு ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
இதில் உடுமலை ஜே.எம்.எண்.2 மாஜிஸ்திரேட் மீனாட்சி, அரசு வக்கீல் சேதுராமன் உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் வங்கி அலுவலர்கள் மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.