தீபாவளி பண்டிகை; திருப்பூரில் நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Tirupur News- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை முதல் திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து நாளை ( 9ம் தேதி முதல்) முதல் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூா் மாநகா் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி திருப்பூா் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், திருப்பூா் புது பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் இருந்து வியாழக்கிழமை முதல் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு அடுத்தடுத்த நாள்களில் திருச்சி, மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊா்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அறிவிப்பு இல்லாதது ஏன்?
பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகை கால கட்டங்களில் திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும் என்றும், பஸ்களின் எண்ணிக்கை குறித்தும் தெளிவாக தெரிவிக்கப்படும். ஆனால், இந்த முறை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களை இயக்க, அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே சென்றுவிட்டனர். பிறகு திருப்பூருக்கு அவர்கள் திரும்பி வரவில்லை. காரணம், இங்கு பனியன் தொழில் நிறுவனங்களில் வேலை இல்லை என்பதுதான்.
அதுமட்டுமின்றி, திருப்பூரில் முன்பு வெளிமாவட்ட மக்கள் இருந்தது போல, இப்போது இருப்பது பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள்தான். அதனால், அவர்கள் ரயிலில்தான் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்த முறை சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு, அதிகாரிகள் தரப்பில் கூறப்படவில்லை.