தமிழகம் - கேரள எல்லை பகுதியில் எஸ்பி ஆய்வு - ஒன்பதாறு சோதனை சாவடிக்கு திடீர் விசிட்
Tirupur News- உடுமலை, அமராவதியை அடுத்துள்ள ஒன்பதாறு சோதனை சாவடிக்கு திடீர் விசிட் செய்த திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், அங்கு நடக்கும் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார்.;
Tirupur News,Tirupur News Today- கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ கூட்டரங்கில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனையை பார்வையிட்டார். மேலும் உடுமலை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது உடுமலை போலீஸ் டிஎஸ்பி சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
போலீசாருக்கு எஸ்பி உத்தரவு
தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில், பொதுவாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், பலரும் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவதும் ஆண்டுதோறும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுபோன்ற நேரங்களில் ஆள் அற்ற வீடுகளை தெரிந்துக்கொள்ளும் திருடர்கள், இரவு நேரங்களில் அந்த வீடுகளில் பூட்டை உடைத்து, நகை பணத்தை திருடிச் செல்கின்றனர். அதனால், தீபாவளி பண்டிகை கால திருட்டுகளை தடுக்கவும், போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குடியிருப்புகளில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கடைவீதிகள், பொது இடங்களுக்கு வரும் பெண்கள் அதிகளவில் நகைகளை அணிந்து வருவதை தவிர்க்கவும்., நெரிசலான இடங்களில், பணம், நகை பறிப்பு சம்பவங்களை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக் கடைகளில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடங்களில் கூடுதலாக போலீசாரை நியமிக்கவும் எஸ்பி தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.