மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் இதுவரை 34, 576 மனுக்கள்; கலெக்டர் தகவல்
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் இதுவரை 34, 576 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் இதுவரை 34, 576 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த டிசம்பர் 18ம் தேதி அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.
மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை போன்றவை சார்ந்த குறைகளை, கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட முதல்வர் திட்டத்தின் கீழ், 34, 576 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் திருப்பூா் மாவட்டத்தில் 2023 டிசம்பா் 18- ம் தேதி தொடங்கப்பட்டு அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாா்டு வாரியாக 71 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்களிடம் இருந்து 34 ஆயிரத்து 576 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை, காவல் துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு துறைகளின் சாா்பில் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் குறித்து பரிசீலனை மேற்கொண்டு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்றாா்.