தமிழகத்தில் இதுவரை 1,355 கோவில்களில் குடமுழுக்கு நிறைவு; அமைச்சர் சேகர்பாபு தகவல்
Tirupur News- தமிழகத்தில் இதுவரை 1,355 கோவில்களில் குடமுழுக்கு நடந்து நிறைவு பெற்றுள்ளதாக, திருப்பூரில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Tirupur News,Tirupur News Today- திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இதுவரை 1,355 கோவில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தனது மனைவியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான கோவில்கள் புனரமைப்புக்காக 2022 - 2023-ம் ஆண்டில் ரூ. 100 கோடி, 2023 - 2024 ம் ஆண்டில் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை 1,355 திருக்கோவில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை (பிப்.2) மட்டும் 13 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாள் கோவிலில் சுமாா் 400 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. உத்திரமேரூா் வட்டம் சாத்தனஞ்சேரி கோவிலில் 300 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு நடந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 197 கோவில்களில், ரூ. 295 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியைப் பொருத்தவரை, பழமையான கோவில்களைப் புனரமைப்பதற்கும், குடமுழுக்கு நடத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து இதை கடைப்பிடிப்போம்.
நடிகா் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கிறீா்கள். அவா் முதலில் களத்துக்கு வரட்டும். பின்னா் அது குறித்து பேசலாம் என்றாா்.