அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காப்பக சிறுவர்கள் 'டிஸ்சார்ஜ்'

Tirupur Government Hospital -திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காப்பக சிறுவர்கள், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

Update: 2022-10-12 04:22 GMT

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை, அமைச்சர் கயல்விழி நலம் விசாரித்தார். 

Tirupur Government Hospital -திருப்பூர் அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டியில்  'விவேகானந்த சேவாலயம்' என்ற ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது இந்த காப்பகத்தில் கடந்த 5-ம் தேதி உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மறுநாள் காலை 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். காப்பகத்தில் இருந்த 11 மாணவர்கள் மற்றும் ஒரு காவலாளி ஆகியோர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தமிழகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திருப்பூரில் நேரடி விசாரணை நடத்தினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுவர்கள் மற்றும் காப்பகத்தில் ஊழியர்களிடம் நேரடி விசாரணை மேற்கொண்டார். காப்பகத்தில், சிறுவர்களை முறையாக பராமரிக்கவில்லை. காப்பக நிர்வாகத்தின் அலட்சியமும், கவனக்குறைவும், மெத்தனப்போக்குமே சிறுவர்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு காப்பகத்தை மூட உத்தரவிட்டது. இந்த காப்பகத்தை சேர்ந்த சிறுவர்களை, ஈரோடு காப்பகத்தில் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும், அவர்களது கல்வி தொடரவும் அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. உயிரிழந்த காப்பகத்தை சேர்ந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க கட்சி சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது,

இந்நிலையில், மூன்று சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம், தமிழக அரசின் உத்தரவின்படி  பூட்டப்பட்டது.  

இந்நிலையில் நேற்று காலை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சையில் இருந்த சிறுவர்களிடம் நலம் விசாரித்தார். சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களை தனித்தனியாக சந்தித்து, நலம் விசாரித்தார். இந்த ஆய்வின்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிகிச்சையில் இருந்த 11 சிறுவர்களில், சிறுவன் குணாவுக்கு காய்ச்சல் இருப்பதால், குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 10 சிறுவர்கள் நேற்று மதியம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மேலும் காவலாளி ஜெயராமனும், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆன சிறுவர்களில், 6 பேர் குடும்பத்தினருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் உள்ள 4 பேர் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு மாதிரி பகுப்பாய்வு முடிவுக்கு பிறகே மூன்று சிறுவர்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News