இணை உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தும் விற்பனையாளர்கள்; விவசாயிகள் புகார்
Tirupur News- இணை உரம் வாங்கும்படி விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக, விவசாயிகளிடையே புகார் எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- காங்கயம்: தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும். சில நேரங்களில் இந்த உரங்களுக்கான தட்டுப்பாடு இருக்கும். ஆனால் அதைச்சார்ந்து வேறு பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால், கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இணை உரப்பிரச்சினை நீடிக்கிறது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்ற விவசாயிகளிடம், விற்பனையாளர்கள் டி.ஏ.பி. ஒரு மூட்டை வேண்டுமெனில் அதே கம்பெனியின் மற்றொரு உரம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கினர். இதனால் ஆங்காங்கே விவசாயிகள் உரவிற்பனைக் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினர். அத்துடன் இதுபற்றிய தகவல் வேளாண்மை துறைக்கு தெரிவிக்கப்பட்டு வேளாண்துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி எச்சரிக்கை செய்து வந்தனர்.
குறிப்பாக வெங்காய சாகுபடி சீசன், மக்காச்சோள சாகுபடி சீசன் தொடங்கிவிட்டால் போதும் இந்த பிரச்சினையும் தொடங்கிவிடும். காங்கயம், தாராபுரம், குண்டடம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பொன்னாபுரம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி. அமராவதி தண்ணீரைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். மக்காச்சோளத்திற்கு முதல் உரமாக யூரியா கொடுப்பது வழக்கமாக உள்ளது. இதனால் அடுத்த மாதம் தொடங்கி யூரியாவின் தேவை அதிகரிக்கும். அப்போது இந்த இணை உரப்பிரச்சினையை உரநிறுவனங்கள் தொடங்கி விடுவர்.
அதே போல அடுத்த சில மாதங்களில் வெங்காயம் சாகுபடி தொடங்கும் நேரத்தில் டி.ஏ.பி.யின் தேவை அதிகரிக்கும். அப்போதும் இந்த பிரச்சினை தொடங்கிவிடும்.
இது பற்றி விவசாயிகள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு அதிகாரிகள் முன்னதாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, உர விற்பனையாளர்கள் கூறுகையில், நாங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இல்லையெனில் ஸ்டாக் தர மறுக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி அந்த உரங்களை வாங்க வேண்டி உள்ளது. அதனால் வேளாண்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரவிற்பனையாளர்கள், விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும், என்றனர்.