சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கை; கலெக்டர் அறிவுறுத்தல்
Tirupur News- மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா்.
Tirupur News,Tirupur News Today- மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை காவல் துறையினரும், போக்குவரத்துத் துறையினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா்.
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் கிறிஸ்துராஜ் பேசியதாவது,
மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது விபத்துக்கான முக்கய காரணங்களாக உள்ளன.
இதைத் தடுக்கும் வகையில் சாலை விபத்துதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விழிப்புணா்வு விளம்பர பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை வளைவுகள், முக்கியச் சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை காவல் துறையினரும், போக்குவரத்துத் துறையினரும் இணைந்து மேற்கொண்டு விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா். முன்னதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் சௌம்யா ஆனந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, மாநகர காவல் துணை ஆணையா்கள் ராஜராஜன், வனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.