கோயில்களில் மாணவா்களுக்கு பாவை விழா போட்டிகளை மீண்டும் நடத்த கோரிக்கை
Tirupur News- கோயில்களில் மாணவா்களுக்கு பாவை விழா போட்டிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் உள்ள கோயில்களில் மாணவா்களுக்கு பாவை விழா போட்டிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்று திருக்கோவில் திருத்தொண்டா் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூரில் உள்ள திருக்கோவில் திருத்தொண்டா் அறக்கட்டளையின் அமைப்பாளா் கொங்கு ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் ஒப்பித்தல், மனப் பாடப் போட்டிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தன.
மாா்கழி மாதச் சிறப்பை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கிலும், மாணவா்களின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் விதமாகவும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். இதில் மிகுந்த உற்சாகத்துடன் ஆண்டுதோறும் கலந்துக்கொண்ட மாணவ மாணவியர் பலரும் இந்த மார்கழி மாத பிறப்பை ஆண்டுதோறும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தப் போட்டிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள இசை ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டிகளின் முடிவில் மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்போட்டிகள் கடந்த 2019-ம் ஆண்டு வரை சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக தொடா்ந்து நடைபெறவில்லை. இதனால் மாணவ மாணவியர் ஏமாற்றத்தில் உ.ள்ளனர்.
அதேவேளையில், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டன.எனினும் நேரடியாக கோயில்களில் நடத்தப்படும் அளவுக்கு அதில் மாணவ மாணவியருக்கு ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படவில்லை. தற்போது கொரோனா நோய்த் தொற்று இல்லாத நிலையில், மீண்டும் இந்தப் போட்டிளை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.