மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி கமிஷனர் மற்றும் தாராபுரம், உடுமலை, பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய நகராட்சி கமிஷனர்களுக்கு திருப்பூா் மாவட்ட சிஐடியு செயலாளா் ரங்கராஜ் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மாநகராட்சி, நகராட்சிகளில் அவுட்சோா்சிங் அடிப்படையில் தனியாா் ஒப்பந்ததாரரிடம் விடப்பட்டிருக்கும் பணிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள், டிபிசி ஊழியா்கள் என அனைவருக்கும், அந்தந்த ஒப்பந்ததாரா்கள் மூலமாக சட்டப்படி நியாயமான தீபாவளி போனஸ் தொகையை, நடப்பு மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் பணியாற்றும் 1500க்கும் மேற்பட்டோருக்கு போனஸ் சட்டம் பொருந்தும். கடந்த ஆண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தியபோது, ஒப்பந்ததாரா்களால் போனஸ் தர காலதாமதம் செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குச் சென்று கடைசி தருணத்தில் ஒப்பந்தப் பணியாளா்களுக்குப் போனஸ் கிடைத்தது.
நடப்பு ஆண்டில், அதுபோன்ற ஒரு காலதாமத நிலைமைக்குச் செல்லாமல் தவிா்த்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் அதிகாரம் பெற்ற ஆணையா்கள், ஒப்பந்ததாரா்களை முன்கூட்டியே அழைத்துப் பேசி, சட்டப்படி நியாயமான போனஸ் தொகையை ஒப்பந்த பணியாளா்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், விரைவில் போனஸ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.