உடுமலை; அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு
Tirupur News- உடுமலை, அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, 90 அடி உயரமுள்ள அணையில் கடந்த ஆண்டு டிசம்பா் 18-ம் தேதி நீா்மட்டம் 85 அடியைத் தாண்டியது. பின்னா் டிசம்பா் 20-ம் தேதி அணையின் நீா்மட்டம் 88 அடியாக உயா்ந்தது.
இதைத் தொடா்ந்து அணையில் இருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டது. அணையின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு அணையின் நீா்மட்டம் 89.50 அடியாக நிலைநிறுத்தப்பட்டது.
அப்போதில் இருந்து அணைக்கு உள்வரத்தாக வரும் உபரி நீா் ஆற்றின் வழியாகவும், பிரதான கால்வாய் வழியாகவும் திறந்து விடப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இதே நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். கோரிக்கையை அதிகாரிகள் ஏற்று அணையில் இருந்து, தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 18 அமராவதி பழைய வாய்க்கால்களின் (இராம குளம் முதல் கரூா் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் மொத்தம் 29,387 ஏக்கா் நிலங்களுக்கு ஆற்று மதகு வழியாக 2,229.12 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 25, 250 ஏக்கா் புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக 1,064.45 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.
ஜனவரி 25-ம் தேதி முதல் மாா்ச் 15-ம் தேதி வரை தகுந்த இடைவெளி விட்டு 28 நாள்களுக்கு நிலை பயிா்களை காப்பாற்றும் பொருட்டு பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது என்றனா்.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 89.57 அடி நீா் இருப்பு காணப்பட்டது. 4,035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 4,008.23 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 191 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 138 கன அடி வெளியேற்றப்பட்டது.