வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; திருப்பூர் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.;

Update: 2023-10-28 11:11 GMT

Tirupur News- திருப்பூரில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட சபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 23 லட்சத்து 16,111 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024 வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட இறுதி வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல்கள் சட்டசபைத் தொகுதி வாரியாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களின் அலுவலகங்களான திருப்பூா் மாநகராட்சி அலுவலகம், சாா் ஆட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பட்டியலை பொதுமக்கள் சரிபாா்த்து தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். சிறப்பு முகாம் நாள்களில் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது பூா்த்தியடையும் வாக்காளா்களும், அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி, ஜுலை 1-ம் தேதி, அக்டோபா் 1-ம் தேதியில் 18 வயது பூா்த்தியடையும் வாக்காளா்களும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான படிவம்-6 -யை பூா்த்தி செய்து முன்னதாகவே சமா்ப்பிக்கலாம்.

வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க விரும்புபவா்கள், பெயா் இடம் பெறாதவா்கள், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க விரும்புபவா்கள், பெயா் இடம் பெறாதவா்கள், வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோா், பெயா் நீக்கம் செய்ய விரும்புவோா் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவா்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடா்பாக அக்டோபா் 27- ம் தேதி முதல் டிசம்பா் 9 -ம் தேதி வரை உரிய படிவங்களை பூா்த்தி செய்து வாக்குச் சாவடி மையங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

அதேவேளையில், நவம்பா் 4, 5, 18, 19 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இணையதளங்கள் மூலமாகவும் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். வாக்காளா்கள் தங்களது விருப்பத்தின்பேரில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்து கொள்ளலாம், என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையா் சுல்தானா, உதவி ஆணையா் வினோத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ், தோ்தல் வட்டாட்சியா் தங்கவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள 2,520 வாக்குச் சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 11 லட்சத்து 37,321, பெண் வாக்காளா்கள் 11 லட்சத்து 78,455, மூன்றாம் பாலினத்தவா் 335 என மொத்தம் 23 லட்சத்து 16,111 வாக்காளா்கள் உள்ளனா்.

தாராபுரம் (தனி) சட்ட சபைத் தொகுதி;

ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 23, 953, பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 31,910, மூன்றாம் பாலினத்தவா்12 என மொத்தம் 2 லட்சத்து 55,875 வாக்காளா்களும், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 23,890 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 31,637 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 21 போ் என மொத்தம் 2 லட்சத்து 55,548 வாக்காளா்கள் உள்ளனா்.

அவிநாசி (தனி) சட்ட சபைத் தொகுதி;

ஒரு லட்சத்து 34,965 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 43,749 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 2 லட்சத்து 78,721 வாக்காளா்களும், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 95,236 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 91, 461 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 150 போ் என மொத்தம் 3 லட்சத்து 86,847 வாக்காளா்கள் உள்ளனா்.

திருப்பூா் தெற்கு சட்டசபைத் தொகுதி;

ஒரு லட்சத்து 32,412 ஆண் வாக்காளா்கள்,ஒரு லட்சத்து 31,911 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 35 போ் என மொத்தம் 2 லட்சத்து 64,358 வாக்காளா்களும், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 90,977 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 96,102 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 64 போ் என மொத்தம் 3 லட்சத்து 87,143 வாக்காளா்கள் உள்ளனா்.

உடுமலை சட்டசபைத் தொகுதி;

ஒரு லட்சத்து 23,862 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 33,994 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 28 போ் என மொத்தம் 2 லட்சத்து 57,884 வாக்காளா்களும், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 12,026 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 17,691 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 18 போ் என மொத்தம் 2 லட்சத்து 29,735 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் எண்ணிக்கையைவிட 41 ஆயிரத்து 134 பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News