ரேஷன் கார்டுகளை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பி ஒப்படைத்த பொதுமக்கள்
Tirupur News- வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது ரேஷன் கார்டுகளை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பி ஒப்படைத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் அனுமந்தபுரத்தைச் சோ்ந்த 54 போ் தங்களது குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒப்படைத்தனா்.
அனுமந்தபுரத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வேப்பம்பாளையத்தில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்கி வந்தனா். அந்தக் கடை சேதமடைந்துள்ளதால் சுமாா் 4 கி.மீ.தொலைவில் உள்ள உப்புப்பாளையம் கிராமத்தில் பொருள்கள் வாங்கி வருகின்றனா்.
இந்நிலையில், சேதமடைந்த நியாய விலைக் கடையை சீரமைக்க வேண்டும் அல்லது நடமாடும் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அனுமந்தபுரத்தைச் சோ்ந்த 80 குடும்ப அட்டைதாரா்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்துள்ளனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் தீா்வு எட்டப்படவில்லை.
இதைத் தொடா்ந்து, அனுமந்தபுரத்தைச் சோ்ந்த 7 போ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேற்று (சனிக்கிழமை) சென்றனா். அங்கு வட்ட வழங்கல் அதிகாரி இல்லாததால் நோ்முக உதவியாளா் சந்திரசேகரிடம் கோரிக்கையை வலியுறுத்தி, தங்கள் பகுதியைச் சேர்ந்த குடும்பங்களின் 54 குடும்ப அட்டைகளை அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.