வரும் 25ம் தேதி உற்பத்தி நிறுத்தப் போராட்டம்; திருப்பூரில் தொழில்துறை முடிவு

Tirupur News- வருகிற 25-ம் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-09-14 12:06 GMT

Tirupur News- கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் இருந்து தொழில் அமைப்புகள் சார்பில், தமிழக முதல்வருக்கு விரைவு தபால்களை அனுப்பியது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today-  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும். ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருப்பூரில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகள் முடிவு செய்தன.

அதன்படி இன்று திருப்பூர் ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் இருந்து திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.

இது குறித்து, ‘டீமா’ சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது,

பீக்ஹவர் கட்டணம் ரத்து, நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்துக்கும், தொழில்துறைக்கும், இ-மெயில் அனுப்பி வருகிறோம். சங்கம் சார்பிலும், தனித்தனி உறுப்பினர்களும் அனுப்பி வருகின்றனர். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மட்டுமே, போராட்டம் நடத்துகிறோம்.

இன்று திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டாக இணைந்து நடைபயணமாக சென்று முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பி உள்ளோம். வருகிற 25-ம் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் வருகிற 24-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். அப்போது தொழில்துறையினரை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாதபட்சத்தில் 25-ம் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என, திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

Similar News