பல்லடம்; கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
Tirupur News- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தால் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகிறது. வருகிற 19-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க கடந்த 3 நாட்களாக போட்டியிடும் கட்சியின் நிர்வாகிகள் தங்கள் தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு வாக்கு சேகரிக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சி பொறுப்பாளர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்ற ஆங்காங்கே சுடச்சுட, கமகம என சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவற்றை தயாரித்து நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக கறிக்கோழி பண்ணைக்கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன்படி 24 -ந்தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) 27-ந்தேதி ரூ.120, 28-ந்தேதி ரூ.125, 29-ந் தேதி ரூ.130 ஆக உள்ளது. 5 நாட்களில் கிலோவிற்கு ரூ.19 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இறைச்சி கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.210 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கிலோ ரூ.260 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் இந்த விலை மாறுபடுகிறது. தேர்தல் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையும், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.