பள்ளிகளில் ‘தி ஜங்கிள் கேங்’ படத்தை திரையிட தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், தி ஜங்கிள் கேங் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிடுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today-கானுயிர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான, தி ஜங்கிள் கேங் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிடுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் சர்வதேச, தேசிய விருதுகள் பெற்ற சிறந்த சிறார் திரைப்படங்கள், மாதந்தோறும் திரையிடப்படுகின்றன. இம்மாதத்திற்கான திரைப்படமாக 2012ல் தமிழில் வெளியான, ‘தி ஜங்கிள் கேங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, பதிவிறக்குவதற்கான லிங்க் பள்ளி எமிஸ் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களான கருப்பு மான், வாத்து, தேவாங்கு ஆகியவை தங்கள் பயணத்தை வடகிழக்கு இந்தியாவில் இருந்து துவங்கி, மத்திய பகுதி வழியாக தென்னிந்தியாவை வந்தடைகின்றன.கதையில் காண்டாமிருகம், புலி, யானை, கரடி போன்ற விலங்குகளின் தகவல்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.
திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தை பள்ளிகளில் திரையிடுவதோடு மாணவர்களை குழுக்களாக பிரித்து, திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் காலாண்டு தேர்வு, விடுமுறை அறிவிக்கப்பட்டு குறைந்த நாட்களே பள்ளி இயங்கியதால், நவம்பர் முதல் வாரத்திற்குள் இப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்பது மிக மிக சொற்பமாகி விட்டது. வயது வந்தவர்களுக்கான படங்களாகவே எடுக்கப்படுகின்றன. குழந்தைகளின் உலகம் சார்ந்த திரைப்படங்கள் வருவதே இல்லை. குழந்தைகளை மையப்படுத்திய அல்லது குழந்தைகள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களை மையப்படுத்திய படங்கள் தமிழில் வருவதே இல்லை. குழந்தைகளுக்கான படங்களை எடுக்கும் இயக்குநர்களுக்கு மானியம், சிறப்பு பரிசுகள், அரசின் சிறப்பு விருதுகள் என அறிவிக்கப்பட்டால் மட்டுமே, குழந்தைகளுக்கான திரைப்படங்கள் உருவாகும்.
வன்முறை சண்டை காட்சிகள், ஆபாசம் நிறைந்த படங்களை பெரியவர்களுடன் இணைந்து, இளம் வயதினரும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில்தான் தமிழில் சினிமாக்கள் வருகின்றன. இதற்கு தீர்வான குழந்தைகள்,. மாணவர்களுக்கான படங்களை எடுக்க தமிழ் பட இயக்குநர்களும், அத்தகைய படங்களில் நடிக்க நடிகர், நடிகைகளும் ஆர்வமாக முன்வர வேண்டும்.