நாளை பிரதமர் மோடி பல்லடம் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் உஷார்
Tirupur News- நாளை பல்லடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Tirupur News,Tirupur News Today- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நாளை (27-ம் தேதி) நடக்கிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,400 ஏக்கர் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை 80க்கு 60 அடி என்ற அளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மீது இரும்பு பில்லர்கள் கொண்டு மேடை அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று கொண்டு பங்கேற்கும் விதமாகவும், 250 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கான பிரத்யேக வழித்தடம், ஹெலிபேடு, உணவுக்கூடம், பார்க்கிங் வசதி, வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி.களுக்கான பகுதி, பொதுக்கூட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துரிதகதியில் நடக்கின்றன. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு சென்றுள்ளார். இதையடுத்து பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என தெரிகிறது.
இதுகுறித்து பொதுக்கூட்டத்திற்கான பொறுப்பாளர்களான பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கூறியதாவது,
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது. அதனை ரத்தாக்கி செயல்படுத்தி காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,333 பூத்களிலும் தலா 370 பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். மாநில தலைவர் அண்ணாமலை, தனது உடலை வருத்திக்கொண்டு யாத்திரைக்காக அனைத்தையும் செய்து வருகிறார். அவரது உழைப்பு ஈடு இணையற்றது. இத்தனை நாட்கள் அவர் உழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொதுக்கூட்டத்தை முழு வெற்றி பெறச்செய்ய உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் வருகிற 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இதன்படி கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவினாசி வழியாக செல்ல வேண்டும். கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.
திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவினாசி வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர் பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி, வழியாக செல்ல வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவினாசிபாளையம் வழியாக செல்ல வேண்டும். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவினாசி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி பா. ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்விதமாக பா. ஜனதா கட்சி அலுவலகத்தில் விளம்பர இசை நிகழ்ச்சி வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில் வேல் முன்னிலை வகித்தார். இசை தயாரிப்பு உடுமலை பிரவீன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அருள் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், பிரதமர் வருகை குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும் பொதுக்கூட்ட மேடை மற்றும் மைதானத்தை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கொள்ளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
போலீசார் கூறுகையில், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்பட 6 மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் இன்று 26 மற்றும் 27-ம் தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.