வரத்து குறைவால் தக்காளி, சின்ன வெங்காயம் விலை ‘விர்ர்’
Tirupur News,Tirupur News Today- வரத்து குறைந்துள்ளதால் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதமாக உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி பயிர்கள் பாதித்தது. நடவு செய்த பெரும்பாலான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்தனர். இந்நிலையில் தற்போது வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட பெட்டி 375 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், சந்தைகளில் கிலோ ரூ. 40 என விற்கப்படுகிறது. மளிகை கடைகளில், ரூ. 40 முதல், ரூ. 45 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,
உடுமலை சந்தைக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில் கடந்த சில மாதமாக விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் அழிக்கப்பட்டது.மழை பொழிவும் குறைந்ததால் சாகுபடி பரப்பும் பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 6 ஆயிரம் பெட்டிகள் என்ற அளவில் உள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சின்ன வெங்காயம் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. . 50 முதல் ரூ. 70 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் 4கிலோ ரூ. 100 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் வரத்து குறைவால், விலை அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.