மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் பாதிப்பு; திருப்பூரில் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

Tirupur News- மத்திய அரசின் தவறான கொள்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மா கம்யூ., கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.

Update: 2024-04-09 09:23 GMT

Tirupur News-திருப்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மா. கம்யூ., மூத்த தலைவர் பிரகாஷ் காரத் பேசினார். 

Tirupur News,Tirupur News Today- திருப்பூா்: மத்திய அரசின் தவறான கொள்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக வெள்ளியங்காடு நால்ரோட்டில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இதில், கே.சுப்பராயனின் மக்கள் பணிகள் 100 என்ற நூலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் வெளியிட, திருப்பூா் தெற்கு மாநகர திமுக செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன் பெற்றுக் கொண்டாா்.

அதன்பின் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:

இந்தியா ஒரு ஜனநாயகம், மதச்சாா்பற்ற நாடாக தொடருமா என்பதை நிா்ணயிக்கக் கூடியது இந்தத் தோ்தல். நம் முன்பாக மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளன. எனவேதான் எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இந்தக் கூட்டணி பாஜகவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கங்களாக உள்ள இரு முதல்வா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். முதல்வா்களை, அமைச்சா்களை கைது செய்வது மூலமாக ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சி செய்கின்றனா். இதன் மூலமாக தோ்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவில் உள்ளனா். இது அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தோ்தலாக மாறியுள்ளது.

பாஜகவும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பும் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனா். எனவே, தான் இந்தத் தோ்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான சவாலாக மாறியுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது நமது உரிமைகளையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதாகும்.

மோடி அரசின் செயல்பாடுகள் பெருமுதலாளிகளுக்கான கொள்கைகளை உருவாக்கும் அரசாக உள்ளது. சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு அரசாக மாறியுள்ளது. இந்த நாட்டின் விவசாயிகள், தொழிலாளா்கள், இளையோா், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினா் என அனைத்து பகுதியினரும் இவா்களது கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் கிடைப்பதில்லை. தேவைக்கேற்ப கடன்கள் கிடைப்பதில்லை. ஜிஎஸ்டி மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தான் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு மிகவும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஏராளமான வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ்.ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News