ஆர்டர்கள் இல்லாததால் ஒலி எழுப்பாத விசைத்தறி கூடங்கள்; தொழிலை உயிர்ப்பிக்க கோரிக்கை

Tirupur News- கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் ஏற்றுமதி ஆர்டர்கள் இல்லாததால், விசைத்தறிகள் இயக்கம் நின்று போயுள்ளது. தொழிலை காப்பாற்ற, விசைத்தறியாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-10-29 12:57 GMT

Tirupur News- விசைத்தறி தொழிலை காப்பாற்ற கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல் ரகங்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இயல்பாக இருந்த நூல் ரகங்களின் விலை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்த விலையை விட 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. நூல் ரகங்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மில் உரிமையாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து மில் உரிமையாளர் சந்திரன் கூறுகையில், தொடர்ந்து நூல் விலை சரிந்து வருவதால் உற்பத்தியை குறைந்துள்ளோம். ஒரு ஷிப்ட் மட்டுமே இயக்குகிறோம். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட நூல் ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தேங்கியுள்ளது. தற்போதைய விலைக்கு விற்றால் நஷ்டம் தான் ஏற்படும். இதேபோல் விலை வீழ்ச்சி அடைந்தால் மில்லை இயக்க முடியாது என்றார்.

கடந்த பல மாதங்களாக, துணி ரகங்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் பல கோடி மீட்டர் துணிகள் குடோன்களில் தேங்கியுள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.

இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்தால் தான் இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள் விற்பனையாகும். ஆனால் வெளிநாட்டு ஆர்டர்கள் தற்போது சுத்தமாக இல்லை. வடநாட்டில் கேட்டாலும் ஆர்டர் இல்லை என்றுதான் கூறுகின்றனர். அதன் காரணமாக பல கோடி மீட்டர் துணி ரகங்கள் தேங்கி கிடக்கின்றன.

வேறு வழியில்லாமல், பாவு நூல் சப்ளையை நிறுத்தி விட்டோம். தொழிலாளர்களிடம் தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு வந்தால் போதும் என அனுப்பி விட்டோம். நஷ்டம் ஏற்படாமல் உரிய விலை கிடைக்கும் போது தான் துணிகளை விற்கும் நிலையில் உள்ளோம் என்றனர்.

விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக இயக்கப்படாததால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குடும்பத்தை நடத்த, கட்டட தொழில் உட்பட மாற்றுப் பணிகளை தேடி சென்றுவிட்டனர்.

மொத்தத்தில் விசைத்தறி ஜவுளி தொழில், தற்போதைய நிலையில் கடும் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொழிலில் ஏற்படும் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன. இங்கு மட்டும், தினசரி ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வரவு, செலவு கணக்கும் நடைபெறுகிறது. இதில் 80 சதவீத துணிகள் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டிலேயே குறைந்த விலையில் பயன்படுத்தப்படுகிறது.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும் போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.

வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும்.

Tags:    

Similar News