திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 23ம் தேதி வரை புகைப்பட கண்காட்சி
Tirupur Photo- திருப்பூரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 23ம் தேதி வரை, காலை 9:30 மணி முதல் மாலை5.30 மணி வரை புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிடலாம்.;
Tirupur Photo- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில், மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சி காந்தி வித்யாலயா பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.
மேலும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. பேரணியை தொடங்கி வைத்ததுடன், கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் அறியும் வண்ணமும், மேலும்அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ- மாணவிகள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு நடைபேரணியை காந்தி வித்யாலயா பள்ளியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணி மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த சுமார்250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, தமிழ் மொழியின் பெருமையும், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளையும் உரக்கச் சொல்லி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கபட்டுள்ள தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்த வரலாற்றுப் பதிவுகள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடப்பட்டது.
மேலும், தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இப்புகைப்பட கண்காட்சியானது இன்று முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும், காலை 9:30 மணி முதல் மாலை5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (திருப்பூர்) பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2