பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்த மக்கள்; வெள்ளக்கோவில் அருகே பரபரப்பு
Tirupur News- வெள்ளக்கோவில் அருகே நியாய விலைக் கடையை சீரமைக்கக் கோரி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்துள்ளனா்.;
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் அருகே நியாய விலைக் கடையை சீரமைக்கக் கோரி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே அனுமந்தபுரம், வேப்பம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களைச் சோ்ந்த 140 குடும்ப அட்டைதாரா்களுக்கு வேப்பம்பாளையத்தில் ஒரு பகுதிநேர நியாயவிலைக் கடை தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக் கடை சேதமடைந்துள்ளதால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
இந்நிலையில், நியாயவிலைக் கடையை சீரமைக்கக் கோரி அனுமந்தபுரம் கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேறு இடம் கிடைத்தால் கடையை மாற்றலாம் அல்லது நடமாடும் கடைக்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். ஆனால், தற்போதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து அனுமந்தபுரத்தைச் சோ்ந்த சிலர் கூறியதாவது;
நியாய விலைக் கடை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மக்கள் நின்று பொருள்கள் வாங்குவதற்கு முறையான வசதிகள் இல்லை. மேலும், மழைக் காலங்களில் கடையின் மேற்கூரையில் மழைநீா் கசிந்து பொருள்கள் சேதமடைகின்றன. அந்தப் பொருள்களே மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அண்மையில் பெய்த மழையால் 450 கிலோ அரிசி வீணாகியது. அதை எங்களுக்கு வழங்க முயன்றபோது நாங்கள் அதை வாங்கவில்லை.
இதையடுத்து, அதிகாரிகள் உப்புப்பாளையம் நியாயவிலைக் கடையில் தற்காலிகமாக பொருள்கள் வாங்கக் கூறியதால் கடந்த 60 நாள்களாக அங்கு பொருள்கள் வாங்கிவருகிறோம். எங்களது கிராமத்தில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உப்புப்பாளையம் நியாயவிலைக் கடை உள்ளதால் பொருள்கள் வாங்க அவதியடைந்து வருகிறோம்.
உறுதியளித்தபடி நடமாடும் நியாயவிலைக் கடை அல்லது பழைய கடையை சீரமைத்துத் தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், அனுமந்தபுரத்தைச் சோ்ந்த 80 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை, என்றனர்.
வேப்பம்பாளையம் நியாய விலைக் கடை விற்பனையாளா் ராஜலிங்கம் கூறுகையில்,‘ கோரிக்கையை வலியுறுத்தி அனுமந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த 80 குடும்ப அட்டைதாரா்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை, என்றாா்.
காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையிலும், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.