பல்லடம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் : அதிகாரி விளக்கம்
‘கோடை சீசன் உச்சத்தை தொடும் நிலையில், விவசாய பணிக்கான மும்முனை இணைப்பில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்’ என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விவசாயிகள் நலன் கருதி, அரசின் சார்பில், மும்முனை இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், சட்டமன்றத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'மாநிலத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பாட்டல் உள்ளது' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், மாநிலத்தில், காற்றாலை மூலமே பெருமளவு மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் மின்சார உற்பத்திக்கேற்ப, மின் வினியோகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
திருப்பூர் மின் பகிர்மான வட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியதாவது; திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், விவசாய பணிக்கென, 24 ஆயிரத்து 200 மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் வரை, தினமும், 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, கோடை துவங்கியுள்ளதால், பகலில், 6 மணி நேரம், இரவில், 3 மணி நேரம் என, குறைந்தபட்சம், 9 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் உற்பத்திக்கேற்ப, சில நேரங்களில் மின்சாரம் வழங்கப்படும் நேரம் அதிகரிக்கும்; இது, தற்காலிகமானது தான். காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிக்கும் போது, கூடுதல் மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மும்முனை மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது; வழங்கப்பட்ட இலக்கை காட்டிலும், அதிகளவில் இணைப்பு வழங்கி வருகிறோம். மின்சார தட்டுப்பாடு என்பது, இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.