நோட்டுக்கு ஓட்டு; யாருக்கு வேட்டு?

நோட்டுக்கு ஓட்டு போடுவதன் மூலம், லஞ்சம், ஊழல் தான் அதிகரிக்கும் என்பதை உணர்த்தும் ஒரு கட்டுரை.;

Update: 2022-02-12 14:00 GMT

பைல் படம்.

"அப்பா...ஒரு, 5 லட்சம் வேணும்; பக்கத்துல இருக்க தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணலாம்ன்னு இருக்கேன். அடுத்த, 3 வருஷத்துல, போட்ட முதலீடை லாபமா எடுத்துடலாம்' என்கிறான், ஒரு விவசாயியின் மகன்.

''நல்ல யோசனை. செய்துடலாம்'' என்கிறார், அந்த விவசாயி தகப்பன்.

''எனக்கு, 10 லட்சம் வேணும்பா. சின்னதா ஒரு 'கிளினிக்' வைக்கணும். அஞ்சு வருஷத்துல, மக்களுக்கு நல்லபடியா சிகிச்சை வழங்கி, ஒரு பெரிய ஆஸ்பத்திரியா கட்டிலாம். முதலீடை காட்டிலும், 3 மடங்கு லாபம் பார்த்துடலாம்'' என்கிறார் டாக்டருக்கு படித்த ஒரு டாக்டரின் மகன்.

''கண்டிப்பா செய்துடலாம் பா'' என்கிறார் அந்த டாக்டர் தகப்பன்.

''எனக்கு, 3 லட்சம் கொடுங்க. சின்னதா ஒரு ஓட்டல் வைக்கிறேன். தரமான உணவை, குறைவான விலையில மக்களுக்கு கொடுக்கலாம்; அடுத்த மூணு வருஷத்துல போட்ட காசை எடுத்துடலாம். பெரிசா ஒரு ஓட்டலையும் கட்டிடலாம்'' என்கிறார், ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படித்த ஒரு பிள்ளை.

''நல்ல யோசனைப்பா. செய்துடலாம்'' என்கிறார் தந்தை.

''எனக்கு, ஒரு டூவீலர் மட்டும் வாங்கிக் கொடுங்க. வீதி, வீதியா போய் துணி வியாபாரம் பண்றேன். சீக்கிரமா 'பிக் அப்' ஆகிடும். சின்னதா ஒரு கடையை போட்டு, உட்கார்ந்துடலாம்'' என்கிறார் ப்ளஸ் 2 மட்டுமே படித்த இளைஞன்.

''உடனே வாங்கித்தர்றேன்'' என்கிறார் அந்த தகப்பன்.

இப்படியாக, உழைப்பை முதலீடாக்க, சின்னதாய் ஒரு முதலீடு தேவைப்படுகிறது. அந்த உழைப்பின் பலன், பல மடங்கு லாபமாக அறுவடை செய்யப்படுகிறது.

அதே நேரம், ''எனக்கு ஒரு, 3 லட்சம் கொடுங்க, நான் கவுன்சிலருக்கு நிற்க போறேன். ஓட்டுக்கு பணம் கொடுத்தா தான், மக்கள் ஓட்டுப்போடுவாங்க'' என, தனது கவுன்சிலர் கனவை தந்தையிடம் சொல்கிறான் ஒரு பிள்ளை.

''செலவு செய்யலாம். அந்த பணத்தை நீ எப்படி திரும்ப சம்பாதிப்ப' என, கேள்வி எழுப்புகிறார் தந்தை.

''அடுத்த, அஞ்சு வருஷத்துக்கு அரசாங்கம் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குவாங்க. அதுல ரோடு போடறதுல இருந்து, தெரு விளக்கு பொருத்துறது வரை எல்லாத்துலேயும் கமிஷன் வாங்கலாம். உள்ளாட்சி கடைகளை ஏலம் எடுக்கலாம்; அதை உள்வாடகைக்கு விட்டும் கூட நிறைய சம்பாதிக்கலாம். கலெக்ஷன், கரெப்ஷன் மூலமா அஞ்சு வருஷத்துல கார், பங்களான்னு செட்டில் ஆன நிறைய பேரை பார்த்திருக்கிறேன்'' என்கிறான் அந்த பிள்ளை.

இன்றைய அரசியல் நிலவரம், இப்படிதான் இருக்கிறது. 'ஓட்டுக்கு நோட்டு' என்ற கலாசாரம் ஆழ வேரூன்றி விட்டது. ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு கூட, சில லட்சங்களை செலவழிக்கும் சூழலில், நேர்மையானர்கள், மக்களோட மக்களாக இருந்து சேவையாற்றுகிற வேட்பாளர்கள் கூட, மக்களின் செல்வாக்கை தக்க வைக்க போராட வேண்டியிருக்கிறது.

'நல்லவர்கள் யார்?' என்பதை பணம் தீர்மானிக்கும் வரை, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதே யதார்த்தம்.

Tags:    

Similar News