பல்லடம், அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பல்லடம், அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-09 05:53 GMT

அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் 800 ஆண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரிய காளியம்மன் கோவில் உள்ளது. உலகேஸ்வர சுவாமிக்கு இடப்புறமாக எட்டு கைகளுடன் கத்தி, தீச்சட்டி, திரிசூலம், உடுக்கை, ஆயுதம் உள்ளிட்டவற்றை ஏந்திபடி, சந்திரன் சூரியன் தலைமேல் அலங்கரிக்க கரிய காளியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் கும்பாபிஷேகவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் பாலாலயம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த கலசம் உலகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 5.15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை திருப்பரங்குன்றம் கோவில் பிரதான அர்ச்சகர் ராஜபட்டர் தலைமையிலான குழுவினர் நடத்தினர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் யானை உலகேஸ்வரர் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர். 

Similar News