கறிக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி தேவை: உற்பத்தியாளர்கள் கோரிக்கை
கறிக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:
கறிக்கோழி உற்பத்தியில் ஆந்திரா, மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, வாரம் 2 கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தியுடன் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. இத்தொழில் ஆண்டுதோறும், ஐந்து சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இருப்பினும், ஊட்டச்சத்து உணவான கறிக்கோழிகள் குறித்து நுகர்வோருக்கும், இத்தொழில் குறித்து தொழில் முனைவோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை.
இதனால், குறைந்த அளவிலேயே தொழில் வளர்ச்சி உள்ளது. தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தொழில் முனைவோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதிதாகத் தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அரசே இலவச பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும். கறிக்கோழி உணவில் உள்ள ஊட்டச்சத்து குறித்து, நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.