கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசு கொள்முதல் செய்து தர, விவசாயிகள் கோரிக்கை
Tirupur News. Tirupur News Today- விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடை வளர்ப்பினை ஊக்குவித்து, கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசு கொள்முதல் செய்து தர வேண்டும்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி செயற்குழு கூட்டம், பொங்கலூரில் உள்ள ஆரியாஸ் ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சந்துரு,விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க.விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் சீனிவாசன், மாநில விவசாய அணி பொது செயலாளர் கவிதா, மாநில செயலாளர்கள் விஜயகுமார், மவுனகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளில் குட்டைகள் குளங்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டம் ஒன்றினை செயல்படுத்த வேண்டும். தக்காளி, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். வாழை போன்ற பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டை தனிப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டைப் பொறுத்து வழங்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழக்கூடிய கால்நடை வளர்ப்பினை ஊக்குவித்து கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசு கொள்முதல் செய்து தர வேண்டும். பாலுக்கான குறைந்தபட்ச விலையை மாட்டுப் பாலுக்கு 50 ரூபாயாகவும் எருமை பாலுக்கு 60 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.அரசு கொள்முதல் செய்யும் கொப்பரை விலையை கிலோவிற்கு 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் மற்றும் கொப்பரை கொள்முதல் நிலையங்களில் நடக்கக்கூடிய முறைகேடுகளை சரி செய்ய வேண்டும்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்த அரசு விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் (ரேசன் கடை) மக்களுக்கு தேங்காய் விநியோகம் செய்ய வேண்டும் அல்லது தேங்காய்களை மதிப்பு கூட்டு செய்து தேங்காய் எண்ணெயாக வழங்கிட வேண்டும். உழவர் சந்தைகளின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்து அங்கு நடக்கக்கூடிய முறைகேடுகளை சரி செய்ய வேண்டும். அதிகாரிகள் விவசாயிகளை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த அறிவுறுத்த வேண்டும்.
பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து இரண்டு புறங்களிலும், 50 மீட்டருக்குள் இருக்கக்கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுக்கான மின் இணைப்பை துண்டிப்பதை கைவிட வேண்டும். ஆனைமலை - நல்லாறு திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.