பல்லடத்தில் ஜவுளி பூங்கா அமைக்க, அரசுக்கு கோரிக்கை
tirupur News, tirupur News today- விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் பல்லடம், சோமனூர் பகுதிகளில் அதிகப்படியான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ. 2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பல்லடத்தில் ஜவுளி பூங்கா அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது,
விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, பல்லடத்தை மையமாகக் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கடந்த 2017 முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசே நிலம் அளித்து, அதில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை திட்டம் கிடப்பில் உள்ளது. சமீபத்தில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். எங்களது பல நாள் கோரிக்கையின்படி பல்லடத்தில் ஜவுளி பூங்கா அமைத்து தர வேண்டும். இதனால் நெசவாளர்கள் சொந்த விசைத்தறியாளர்களாக மாற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருப்பூர், அவிநாசி, தாராபுரம் பகுதிகளுக்கு நடுவில் பல்லடம் அமைந்துள்ளதால் இங்கு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் பட்சத்தில், மற்ற தொழில் நகரங்களில் இருந்து, தொழில் சார்ந்த பரிவர்த்தனை, வியாபாரம், உற்பத்திக்கான ஆர்டர்கள் பெறவும் வாய்ப்பு ஏற்படும். விசைத்தறித் தொழிலாளர்களுக்கு இதன் வாயிலாக, அதிக வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில், ஜவுளி பூங்கா என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால், அது பல்லடமாக இருக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படைய மிகவும் உதவியாக இருக்கும் என்பதும், தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.