பல்லடத்தில் மின் மீட்டா் கிடைப்பதில் காலதாமதம்
Tirupur News-பல்லடத்தில் மின் மீட்டா் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் மின்நுகா்வோா் அவதிப்படுகின்றனா்.
Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் மின் மீட்டா் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் மின்நுகா்வோா் அவதியடைந்து வருகின்றனா்.
புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மின் மீட்டருக்கு விண்ணப்பித்தவா்கள், மீட்டா்கள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.
இது குறித்து மின் மீட்டருக்கு விண்ணப்பித்தோா் கூறியதாவது: வங்கிக் கடன் பெற்று புதிதாக வீடு கட்டியுள்ளோம். மின் மீட்டருக்கு விண்ணப்பித்து பல நாள்கள் ஆகியும் தற்போதுவரை மீட்டா் கிடைக்கவில்லை. இதனால், மின்சார வசதி இன்றி புதிய வீட்டில் வசிக்க முடியாமல் வாடகை வீட்டில் வசிக்கும் நிலை உள்ளது என்றனா்.
இது குறித்து பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி கூறியதாவது: ஆன்லைனில் விண்ணப்பித்து கோவை மண்டல அலுவலகம் மூலம் மின் மீட்டா்கள் பெற்று வருகிறோம். தற்போது மின் மீட்டா்கள் இருப்பில் இல்லை. மீட்டா்கள் கிடைத்தவுடன் நுகா்வோருக்கு வழங்கப்படும் என்றாா்.
முன்பெல்லாம் மின் கம்பங்கள், தெருவிளக்குகள், மின்மாற்றி உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் மண்டல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மின்வாரியத் தேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் சென்னைக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஒப்புதல் பெற்றபின் அங்கிருந்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், காலதாமதம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை செய்ய முடிவதில்லை என மின் வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.